×

கல்லிடைக்குறிச்சியில் ஆளே இல்லாத சாலையில் பாதயாத்திரை சென்ற அண்ணாமலை

*3 கி.மீ தூர நடைபயணத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

அம்பை : அம்பை தொகுதியில் பாதயாத்திரையாக சென்ற பாஜ தலைவர் அண்ணாமலையை பார்க்க பொதுமக்கள் யாரும் வராததால் தொண்டர்கள் மட்டும் புடைசூழ வெறிச்சோடிய கல்லிடைக்குறிச்சி மெயின்ரோடு வழியாக பாதயாத்திரை நடத்தினார். மெயின்ரோட்டை முழுவதுமாக ஆக்கிரமித்து அடைத்து வந்ததால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரைக்கு கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் அருகில் சேரை மேற்கு மண்டல தலைவர் சிவராம கிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணிக்கு ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை பாஜ மாநில அண்ணாமலை தொடங்குவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாலை 3.30 மணிக்கே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என பலர் வந்து காத்திருந்த நிலையில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்து பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கினார்.

முன்னதாக அவர் காரில் வந்து இறங்கி நிர்வாகிகள் வரவேற்பை ஏற்றுக்கொண்ட போது, தொண்டர்கள் மத்தியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் முண்டியடித்து தள்ளியதால் அண்ணாமலை நிலைதடுமாறினார். இதனால் ஆத்திரமடைந்த நெல்லை பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மைக்கில் தொண்டர்களை திட்டினார். கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் தொடங்கி பாதயாத்திரையாக சென்ற பாஜ தலைவர் அண்ணாமலையை பார்க்க பொதுமக்கள் யாரும் வராததால் தொண்டர்கள் மட்டும் புடைசூழ வெறிச்சோடிய மெயின்ரோடு வழியாக பாதயாத்திரை நடத்தினார். மெயின்ரோட்டை முழுவதுமாக ஆக்கிரமித்து அடைத்து வந்ததால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் அம்பை கல்லிடைக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாபநாசத்தில் இருந்து நெல்லை செல்லும் பஸ்கள் மற்றும் நாகர்கோவில், நெல்லையில் இருந்து பாபநாசம் வரும் பஸ்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்லும் நகர பேருந்துகள், மினிபஸ்கள் பல்வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டதால் 4 மணி நேரம் பஸ் நிலையங்களில் பயணிகள் காத்துக்கிடந்தனர்.அம்பை ஆர்ச் அருகே பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை காண நீண்ட நேரம் கால்கடுக்க நின்று கொண்டிருந்த சிறுமிகளையும், பெண்களையும் அவர் கண்டு கொள்ளாமல் சென்றதால் மனமுடைந்து வருத்தத்துடன் சென்றனர்.

அம்பையில் வழிநெடுக உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் பாதயாத்திரை செல்லும் அண்ணாமலையை சுற்றிலும் தொண்டர்கள் மறைத்து சென்றதால் எங்கே போகிறார் என தேடும் நிலையில் தான் பாதயாத்திரை நடந்தது. சுமார் 3 கி.மீ.தூரம் மட்டுமே நடைபெற்ற பாதயாத்திரையால் 3 மணி நேரம் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமலும், மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமலும் அவதியடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பாஜ தலைவர் அண்ணாமலை அம்பை ஸ்டேட் பாங்க் அருகில் திறந்த வாகனத்தில் நின்று பேசினார். மேடை அருகே ஒன்றிய அரசின் திட்டங்களை பெற உதவுகிறோம் என்கிற பெயரில் மொபைல் நம்பரை கேட்டு உடனடியாக உறுப்பினர் அட்டைகளை எழுதிக் கொடுத்து மிஸ்டுகால் உறுப்பினர்களை சேர்த்தனர். இந்த பாதயாத்திரையில் உடன் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், நெல்லை மாவட்ட தலைவர் தயா சங்கர், பாஜக அரசாங்க பிரிவு மாவட்ட தலைவர் சேகர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

The post கல்லிடைக்குறிச்சியில் ஆளே இல்லாத சாலையில் பாதயாத்திரை சென்ற அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Anamalai ,Patiyatri ,Kallidyakyurchici ,Bathyatra ,Absent Road ,Kallytikyukaran ,
× RELATED தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக...